×

அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி

சென்னை: அதிமுக ஆட்சியின்போது, போலியான அனுமதி எண்ணை வைத்து ஆவணங்களை பதிவு செய்து தணிக்கையில் முறைகேடு செய்ததாக மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை பதிவுத்துறை பயிற்சிப் பிரிவில் மாவட்ட பதிவாளராக இருப்பவர் அகிலா. இவர், காஞ்சிபுரத்தில் 2017ம் ஆண்டு முதல் 2019 வரை தணிக்கை மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தார். அப்போது, காஞ்சிபுரம் இணை-4 சார்பதிவாளர் அலுவலகத்தில் சுதர்சனம் நகர் பகுதியில் மதிப்புநிர்ணயம் செய்யாமலும், போலி அப்ரூவல் எண்ணை வைத்து 165 மனைகளை பதிவு செய்ததாக நகரமைப்பு (டிடிசிபி) பிரிவில் இருந்து பதிவுத்துறைக்கு புகார் எழுந்தது.

மேலும் இவரது பணி காலத்தில் அளவுக்கு அதிகமாக அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்து இதை தணிக்கை செய்யாமல் விட்டுவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் பல சட்டவிரோத ஆவணங்களை தணிக்கை குறிப்புரையில் சேர்க்காததாலும் இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தொடர் புகார்களால் விசாரணைக்குள்ளான அகிலா, அதிகாரம் இல்லாத பயிற்சி பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இதனால் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் இருப்பதால், அவருக்கு பணி ஓய்வு வழங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை தொடர்ந்து அகிலாவை, பதிவுத்துறை தலைவர் ஆலிவர் பொன்ராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேற்கண்ட சட்டவிரோத பத்திரங்களுக்கு பின்னால் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஒருவர் இருப்பதால் அவரையும் விசாரணை வளையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அகிலா தணிக்கை செய்த காலங்களுக்கு சிறப்பு தணிக்கை செய்ய பதிவுத்துறைத்தலைவர் ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து வருவதாகவும், இதன் மூலம் கடந்த கால ஆட்சியின் பல ஊழல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

The post அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,IG ,Oliver Ponraj ,CHENNAI ,Akila ,Kanchipuram ,IG Oliver Ponraj ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...